மற்றொரு வாரத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் முழுவதும் நமது கருப்பொருள், “ஜெபத்தினால் ஆளுகை செய்தல்” என்பதாக இருந்தது. நேற்றைய என்னுடைய செய்தியில், மிகவும் முக்கியமான, ஒரு நடைமுறை கேள்விக்கான பதிலை நாம் பார்த்தோம். நம்முடைய தேசத்தின் நன்மைக்காக கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்கத் தவறி விட்டோம், ஒரு வல்லமையான பாதிப்பை உண்டாக்கத் தவறி விட்டோம், அதற்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழத் தவறி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது இந்தச் சூழ்நிலைக்கான தீர்வைக் காணும்படி, நாம் செய்யக்கூடிய விஷயம் ஏதாகிலும் இருக்கிறதா? ‘ஆம்’ என்பதுதான் என்னுடைய பதில். வேதாகமம் தெளிவான, நடைமுறையில் நாம் செயல்படுத்தக்கூடிய ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறது. அது 1 நாளாகமம் 7-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. 14-ம் வசனத்தில் வாசிப்போம்.

14 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.”

இந்த வசனத்தில் 7 காரியங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை நான் சுட்டிக் காண்பித்தேன். அதில் மூன்று காரியங்கள், நமக்காகச் செய்வேன் என்று தேவன் சொன்ன காரியங்களாகும். மீதமிருக்கும் நான்கு காரியங்கள், நாம் செய்ய வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிற காரியங்களாகும். நான் செய்வேன் என்று தேவன் சொன்ன மூன்று காரியங்கள், கடைசியில் வருகின்றது. நான் பரலோகத்திலிருந்து செவிகொடுப்பேன், உங்களுடைய பாவத்தை மன்னிப்பேன், உங்களுடைய தேசத்திற்கு ஷேமம் கொடுப்பேன் என்றெல்லாம் தேவன் சொல்கிறார். இந்த மூன்றில், கடைசி விஷயத்தை நோக்கித்தான் நாம் பிரயாசப்படுகிறோம். அதாவது நம்முடைய தேசத்தின் ஷேமத்திற்காகத்தான் நாம் இதையெல்லாம் செய்கின்றோம். நாம் தேவனுடைய நிபந்தனைகளை பூர்த்தி செய்வோம் என்றால், தேவன் இம்மூன்று காரியங்களையும் செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். அதில் கடைசி, உச்சகட்டமான விஷயம்தான், நம் தேசத்திற்கு ஷேமம் உண்டாவதாகும். ஆக, நம் தேசத்திற்கு ஷேமம் உண்டாகக்கூடிய சாத்தியக்கூறை தேவன் நமக்குக் கொடுக்கிறார். நம் தேசத்திற்கு ஷேமம் உண்டாக முடியும் என்று அவர் சொல்கிறார். ஆனால் அதற்கு அவர் நம்மிடம் நான்கு காரியங்களை எதிர்பார்க்கிறார். அந்த நான்கு காரியங்கள் எவை? முதலில், நாம் நம்மையே தாழ்த்த வேண்டும். இரண்டாவதாக, நாம் ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் தேவனுடைய முகத்தைத் தேட வேண்டும். நான்காவதாக, நம்முடைய துன்மார்க்கமான வழிகளை விட்டு நாம் மனந்திரும்ப வேண்டும். இந்த நான்கையும் நான் இன்னொரு முறை சொல்கிறேன். முதலில், நாம் நம்மையே தாழ்த்த வேண்டும். இரண்டாவதாக, நாம் ஜெபிக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் தேவனுடைய முகத்தைத் தேட வேண்டும். நான்காவதாக, நம்முடைய அக்கிரமமான வாழ்க்கைமுறையை விட்டு நாம் மனந்திரும்ப வேண்டும்.

தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிற முதல் காரியம், நம்மையே நாம் தாழ்த்த வேண்டும். வேதவசனங்களில், எங்கெல்லாம் தாழ்மையைக் குறித்து தேவன் பேசுகிறாரோ, அங்கெல்லாம் அவர் அந்தப் பொறுப்பை நம் மீதுதான் வைத்திருக்கிறார். தேவன் நம்மைத் தாழ்மைப்படுத்துவதில்லை. நாம்தான் நம்மையே தாழ்த்த வேண்டும். தாழ்மை என்பது ஒரு உணர்ச்சி அல்ல. தாழ்மை என்பது ஒரு மத வேஷம் அல்ல, மத அலங்காரப் பூச்சும் அல்ல. தாழ்மை என்பது நாம் சித்தங்கொண்டு, தீர்மானம் எடுத்து, செயலில் காண்பிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. “நீ உன்னையே தாழ்த்து!” என்றுதான் தேவன் சொல்கிறார். அதுமட்டுமல்ல, நம்மையே தாழ்த்த வேண்டிய விஷயத்தில், தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்த ஒரு தெளிவான, நடைமுறை வழியை வேதாகமம் நமக்குக் கொடுத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு நல்ல செய்தி. என்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தில், என்னை தாழ்த்த வேண்டும் என்று நான் விரும்பின ஒரு நேரம் உண்டு. ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது எனக்கு மெய்யாகவே தெரியவில்லை. அந்த நேரத்தில்தான், ஒரு இரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். பல கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அந்த இரகசியம் வெளிப்படவில்லை. ஆனால் இன்று தேவன் அதைத் திரும்பவும் வெளிப்படுத்துகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். உபவாசம்தான் அந்த இரகசியம். ஆம், நம்மைத் தாழ்த்தும்படி, வேதவசனத்தில் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற, வெளிப்படுத்தப்பட்டிருக்கிற வழி, உபவாசமாகும். ஆனால் இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இது பழக்கப்படாத, அறிமுகமில்லாத ஒரு வார்த்தையாய் இருக்கிறது. ஆனாலும், இந்த வார்த்தை வேதாகமத்தில் பல்வேறு தருணங்களில், பல முறை எழுதப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொன்னால், வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிற முக்கியமான தேவமனுஷர்களில் பெரும்பாலும் எல்லோருமே உபவாசமிருந்திருக்கிறார்கள். அதுதான் உண்மை.

உபவாசத்திற்கான விளக்கத்தை நான் முதலில் சுருக்கமாகக் கொடுக்கிறேன். நான் புரிந்து கொண்டபடி, உபவாசம் என்பது, ஆவிக்குரிய நோக்கங்களுக்காக உணவைத் தவிர்த்து விட்டு, தேவனிடம் ஜெபிப்பதாகும். சில நேரங்களில், அது உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்க்கிற விஷயமாகவும் இருக்கிறது. ஆனால் வழக்கமாக, அது உணவை மட்டுமே தவிர்ப்பதாகும். பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று எடுத்துக்காட்டுகளை நான் கொடுக்கிறேன். நம்மையே தாழ்த்தும்படி, உபவாசம் எப்படி வேதவசனத்தில் நியமிக்கப்பட்ட ஒரு வழியாய் இருக்கிறது என்பதை இதன் மூலம், நான் எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன். முதல் எடுத்துக்காட்டு, தாவீதின் சாட்சியாகும். சங்கீதம் 35:13-ல், அவன் சொல்கிறான்:

13.............நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன் (தாழ்த்தினேன்). என் ஜெபமும் என் மடியிலே திரும்ப வந்தது.

தாவீது இங்கே உபவாசத்தையும், ஜெபத்தையும் இணைத்துப் பேசியிருக்கிறதை நாம் பார்க்கிறோம். உபவாசத்தின் மூலம், அவன் தன் ஆத்துமாவைத் தாழ்த்துகிறான். இது அவன் ஜெபத்தை அதிக வல்லமையுள்ளதாய், அதிக பலனுள்ளதாய் மாற்றியது. இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதாவது உபவாசம், ஜெபத்தை வல்லமையுள்ளதாக்குகிறது. நாம் ஏன் நம் ஆத்துமாவை தாழ்த்த வேண்டும்? வேதவசனத்தில் நான் புரிந்து கொண்டபிரகாரம், ஆத்துமா என்பது அகங்காரமும், தற்பெருமையும் கொண்டதாக இருக்கிறது. அது தன் சுயத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுகிறது. அது தனக்கு என்ன வேண்டும், என்ன முக்கியம் என்பதைத்தான் முக்கியப்படுத்தி, வலியுறுத்துகிறது, கோருகிறது. “எனக்கு இது வேண்டும்.......இதுதான் எனக்குத் தேவை........என்னை ஆசீர்வதியும்........எனக்காக ஜெபம் செய்யும்...........எனக்கு உதவி செய்யும்,” என்றுதான் அது எப்பொழுதும் சொல்கிறது. அது எப்பொழுதும் தன்னைக் குறித்தே பேசுகிறது. அதுதான் நம்மை சுயநலமானவர்களாக உருவாக்கியிருக்கிறது. அதுதான் நமக்கும் நம்முடைய ஜெபங்களுக்கான பதிலுக்கும் இடையே ஒரு பெரிய தடைச்சுவராக இருக்கிறது. நம்முடைய சுயம்தான், நமக்கும் தேவனுக்கும் இடையே ஒரு நல்ல உறவு உண்டாகி விடாதபடி ஒரு பெரிய தடையாக இருக்கிறது. ஆகையால் நாம் நம் ஆத்துமாவை தாழ்த்த வேண்டும். நாம் அதைக் கீழ்ப்படுத்த வேண்டும். உபவாசம், அதைச் செய்வதற்கு ஒரு வழியாக இருக்கிறது.

பழைய உடன்படிக்கையின் கீழ் அனுசரிக்கப்பட்ட பாவ நிவிர்த்தி நாளைக் குறித்து, தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த கட்டளையை இப்பொழுது நாம் பார்ப்போம். யாம் கிப்பூர் என்ற அந்த மகா பலியின் நாளை, யூதர்கள் இன்றுவரை அனுசரிக்கின்றார்கள். லேவியராகமம் 16:29-31 வசனங்களை வாசிப்போம்.

29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துகாக்களை தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. 30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்பொருட்டு, உங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்யப்படும். 31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள். அதிலே உங்கள் ஆத்துமாக்களை தாழ்மைப்படுத்தக்கடவீர்கள். இது நித்திய கட்டளை.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய ஆத்துமாக்களைத் தாழ்த்த வேண்டும் என்பதை தேவன் இங்கு ஒரு நிபந்தனையாக முன் வைக்கிறார். புதிய மொழிபெயர்ப்புகளில் ஒன்றாகிய, நியு இன்டர்நேஷனல் வேதாகம மொழிபெயர்ப்பில் (NEW INTERNATIONAL VERSION), அடிக்குறிப்பில், அவர்கள் அதை “உபவாசம் இருக்க வேண்டும்” என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அதாவது அந்த நாளிலிருந்து, இன்று வரை, கிட்டத்த 4000 வருடங்களான பிறகும், இப்பொழுதும் இவ்வுலகமெங்கும் வாழ்கின்ற யூதர்கள், இந்த பாவ நிவிர்த்தி நாளை, ஒரு கடுமையான உபவாச நாளாகத்தான் அனுசரித்து வருகின்றார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், உபவாசம்தான், நம்முடைய ஆத்துமாக்களை தாழ்த்துவதற்கான தேவன் நியமித்த வழி என்பதை யூதர்கள் எப்பொழுதுமே உணர்ந்திருக்கிறார்கள்.

இப்பொழுது நாம் மூன்றாவது எடுத்துக்காட்டைப் பார்ப்போம். எஸ்றாவையும், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்புகிறவர்களையும் குறித்து இதில் பார்ப்போம். எஸ்றா 8:21 மற்றும் 23 வசனங்களை வாசிப்போம்:

21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன். 23 அப்படியே நாங்கள் உபவாசம் பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம். எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

எஸ்றாவும், நாடு கடத்தப்பட்ட மற்றவர்களும் மிகவும் ஆபத்தான, ஒரு நீண்ட பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். எதிரிகளும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் நிறைந்த ஒரு தேசத்தின் வழியாக அவர்கள் கடந்து செல்ல வேண்டும். அவர்களோடு அவர்களுடைய மனைவி மற்றும் பிள்ளைகளும் இந்தப் பிரயாணத்தில் சேர்ந்து செல்கின்றனர். தேவாலயத்தின் பரிசுத்த பாத்திரங்களையும் அவர்கள் எருசலேமுக்கு திரும்பி எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும். ஒரு பாதுகாப்பான பிரயாணம் தங்களுக்கு அமையும்படி, அவர்கள் உபவாசத்தினால் தங்களைத் தாழ்த்துகிறார்கள், தேவனைத் தேடுகிறார்கள். தேவனும் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டார். தேவனே அவர்களுக்கு பாதுகாப்பான பிரயாணத்தை வாய்க்கப் பண்ணினார்.

ஆக, பழைய ஏற்பாடு முழுவதிலும் இதை நாம் பார்க்க முடியும். உபவாசம் என்பது நம்மையே தாழ்த்தும்படி வேதவசனம் நமக்குக் காண்பிக்கிற ஒரு வழியாக அறியப்படுகிறது. உபவாசம், நம்மையே தாழ்த்தும்படி தேவன் நமக்கு நியமித்த ஒரு வழியாகும். 2 நாளாகமம் 7:14-ல் எழுதப்பட்டிருக்கிற இந்த வாக்குத்தத்தத்தில், அதைத் தொடர்ந்து வருகிற படிகள் என்ன? நாம் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் அடுத்த படி. ஆனால் நாம் உடைக்கப்பட்ட நிலையில், நொறுங்குண்ட இருதயத்துடன், தாழ்மையாய் முற்றிலும் தேவனைச் சார்ந்து கொண்டவர்களாய் ஜெபிக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில், தேவன் உதவி செய்யவில்லை என்றால், நம்முடைய நிலை அவ்வளவுதான் என்பதை அங்கீகரித்தவர்களாய் நாம் ஜெபிக்க வேண்டும். அவர் நமக்கு உதவி செய்யவில்லை என்றால், வேறு எதுவும், வேறு எவரும் நமக்கு உதவி செய்ய முடியாது. வேறு எவரும் நம் தேவையைச் சந்திக்க முடியாது என்ற மனநிலையில்தான் நாம் ஜெபிக்க வேண்டும். ஆகையால்தான் நம்மைத் தாழ்த்த வேண்டிய செயல் முதலில் வருகின்றது என்று நான் விசுவாசிக்கிறேன். காரணம், அகங்காரத்தோடும், தற்பெருமையோடும், சுய நீதியோடும், சுய திருப்தியோடும் ஏறெடுக்கப்படுகிற ஜெபம், சர்வ வல்ல தேவனுடைய கரத்தை அசைக்காது.

இப்பொழுது அடுத்த காரியம், தேவனை, தேவனுடைய முகத்தை நாம் தேட வேண்டும். ஓசியா 10-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 12-ம் வசனத்தை வாசிப்போம்:

12 உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். கர்த்தர் வந்து உங்கள் மேல் நீதியை வருஷிக்கப் பண்ணும் மட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.

ஒரு ஜெபக்கூட்டத்திற்குச் சென்று ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலேயோ ஜெபிப்பதென்பது வேறு. ஆனால் கர்த்தர் வரும்வரை, தேவனிடமிருந்து தெளிவான, குறிப்பான ஒரு பதில் வெளிப்படும்வரை, அவருடைய முகத்தைத் தேடுவதென்பது முற்றிலும் வித்தியாசமானதாயிருக்கிறது. தேவன் வரும்வரை, தேவனுடைய கரங்கள் நம் சார்பில் நீட்டப்படுவதை நாம் பார்க்கும்வரை, நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கும்படி தேவன் கிரியை செய்கின்றார் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை நாம் பார்க்கும்வரை, ஜெபத்தில் நாம் அவருடைய முகத்தைத் தேட வேண்டும் என்பதைக் குறித்துதான் 2 நாளாகமம் 7:14-ல் தேவன் பேசுகின்றார் என்று நான் விசுவாசிக்கின்றேன். உங்களுடைய தரிசு நிலத்தை பண்படுத்துங்கள் என்று ஓசியா சொல்கிறான். அதை நாம் செய்யக்கூடிய ஒரு வழி, உபவாசமாகும். நம்முடைய வாழ்க்கையில் இன்னும் பண்படுத்தப்படாத பகுதிகள் இருக்கின்றன. அவை இன்னும் தேவனுக்கு கனிகளைக் கொடுக்கவில்லை. மெய்யான பலன்கள் எதுவும் இல்லாத பகுதிகளாய் இவை இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரின் மெய்யான கிரியை எதுவும் அவற்றில் நடக்கவில்லை. ஆகையால் தேவன் இங்கே சொல்கிறார், ”உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள். கர்த்தர் வந்து, உங்கள் மேல் நீதியின் மழையை பெய்யப் பண்ணும் வரை, கர்த்தரை விடாது தொடர்ந்து தேடுங்கள்.” ஆம், தேவன் நிச்சயம் வருவார், இந்த தேசத்தின் மீது நீதியின் மழையை பொழியப் பண்ணுவார். இதுதான் நம்முடைய தேசத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று வெளிப்படையாகச் சொல்கிறேன். நான் அப்படித்தான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் அவருடைய முகத்தைத் தேட வேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

இப்பொழுது கடைசியாக அவர் நம்மிடம் வைக்கும் நிபந்தனை, நம்முடைய அக்கிரமமான வாழ்க்கைமுறையை நாம் விட்டு விட வேண்டும். அதை விட்டு நாம் விலக வேண்டும். ஒருவேளை நீங்கள் சொல்லலாம், “அப்படியென்ன பொல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்கின்றேன்? நான் சபைக்குச் செல்கிறேன். நான் ஜெபிக்கிறேன். என் வேதத்தை நான் வாசிக்கிறேன். என் வரிகளை நான் ஒழுங்காகக் கட்டி விடுகிறேன். யாருக்கும் எந்தத் தீங்கும் நான் செய்ததில்லை.” ஒரு நிமிடம் பொறுங்கள். யார் இங்கு சரி? நீங்களா அல்லது தேவனா? பவுல் சொல்கிறார், “ஓ மனுஷனே, தேவனிடம் கேள்வி கேட்க நீ யார்?” நீங்கள் தேவனோடு தர்க்கம் பண்ணுகிறீர்களா? நம்மிடம் எந்த துன்மார்க்கமும், அக்கிரமமும் இல்லை என்று நீங்கள் தேவனிடம் சொல்கிறீர்களா? ஆனால் நம்முடைய துன்மார்க்கமான வாழ்க்கைமுறைதான், நம்முடைய தேசத்தில் காணப்படும் இவ்வளவு பிரச்சனைகளுக்க்கும் காரணம் என்று தேவன் சொல்கிறார்.

நிறைய அக்கிரமச் செயல்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டு முக்கியமான அக்கிரமச் செயல்களை நான் இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன். ஒன்று, செய்ய வேண்டிய சரியான காரியத்தைச் செய்யாமல் தவிர்ப்பதால், அதை அசட்டை செய்வதால் வரும் பாவமாகும். உங்களால் செய்ய முடிந்த ஒரு நல்ல செயலை நீங்கள் செய்யவில்லை என்றால் அது ஒரு பாவம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாக்கோபு 4:17 சொல்கிறது:

17 ஆதலால் ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமல் போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

ஆக, இது நீங்கள் செய்கிற காரியங்களை மட்டும் பொறுத்ததல்ல. ஒரு விஷயத்தை முக்கியமானதாக தேவன் பார்க்கும்போது, நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அதுவும் அக்கிரமச் செயல்தான். எடுத்துக்காட்டிற்கு, உபவாசம் என்பது நம்மைத் தாழ்த்தும்படி தேவன் நியமித்த வழியாயிருக்கும்போது, நீங்கள் அதை அறிந்தும், நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், அது நீங்கள் செய்யும் பாவமாயிருக்கும். நீங்கள் அதை மாற்ற வேண்டும் என்று தேவன் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

சபைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களிடம் பொதுவாகக் காணப்படும் இன்னொரு அக்கிரமச்செயல், மற்றவர்களை மன்னியாத செயலாகும்.

ஒரு வேலைக்காரன் தன் எஜமானிடம் 10,000 தாலந்து கடன்பட்டிருந்தான். அவனால் அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்த உவமை உங்களுடைய நினைவிலிருக்கும் என்று நினைக்கிறேன். அவனுடைய எஜமான், அவனுடைய ஒட்டுமொத்தக் கடனையும் இலவசமாய் மன்னித்து விட்டான். இப்பொழுது அவன் வெளியே சென்றான். தன்னிடம் 100 வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்த தன் சக ஊழியக்காரனை அவன் பார்த்தான். அவன் தன் எஜமானிடம் பட்ட கடனில் இது மிக மிகச் சிறிய ஒரு தொகையாகும். ஆனால் அவன் தன் சக ஊழியக்காரனை மன்னிக்க மறுத்து விட்டான். ஆகையால் மற்ற ஊழியக்காரர்கள் எஜமானிடம் இதைக் குறித்து முறையிட்டனர். மன்னியாத அந்த வேலைக்காரனை, எஜமான் அழைப்பித்தான். எஜமான் அவனிடம் இவ்வாறு சொன்னான்: மத்தேயு 18-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 32-35 வசனங்களை வாசிப்போம்.

32 அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து, “பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக் கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்து விட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ,” என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும், உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தான். 35 (இப்பொழுது இயேசு இவ்வாறு இதை முடிக்கிறார்) ”நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமல் போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்,” என்றார்.

நான்கு குறிப்புகளை மட்டும் சீக்கிரமாய் நான் சொல்லி விடுகிக்றேன். முதல் குறிப்பு, மன்னியாத செயல், அக்கிரமச் செயலாகும். இரண்டாவது குறிப்பு, அது கர்த்தரை கோபமடையச் செய்கிறது. மூன்றாவது குறிப்பு, சித்ரவதை செய்பவர்களிடம் ஒப்படைக்கப்படுகிற நிலை உண்டாகிறது. இதுதான் தண்டனை. நான்காவது குறிப்பு, நம்முடைய சக விசுவாசிகளை நாம் மன்னிக்கவில்லை என்றால், தேவனும் நம்மை மன்னிக்க மாட்டார் என்று மிகவும் குறிப்பாக இயேசு நம்மை எச்சரிக்கிறார். அவர் நம் மீது கோபப்படுவார். அவர் நம்மை சித்ரவதை செய்பவர்களிடம் ஒப்படைப்பான். தேவனிடம் நாம் கடன்பட்ட அனைத்தையும் நாம் செலுத்தித் தீர்க்கும்வரை, அந்தச் சிறையிருப்பிலிருந்து, அந்தச் சூழ்நிலையிலிருந்து நாம் வெளியே வர மாட்டோம்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நேரத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை உங்களுடன் மீண்டும் வருவேன். அடுத்த வாரம் ஜெபத்தின் மிக உயர்ந்த வடிவங்களில் ஒன்றான, உண்மையில் கிறிஸ்தவ ஊழியத்தின் மிக உயர்ந்த வடிவங்களில் ஒன்றான “பரிந்துபேசும் ஊழியம்” குறித்து பேசப் போகிறேன்.

இப்போது சில முக்கியமான அறிவிப்புகளுக்காக தொடர்ந்து கேளுங்கள். குறிப்பாக, “ஜெபம் மற்றும் உபவாசத்தின் மூலம் வரலாற்றை வடிவமைத்தல்” என்ற என் புத்தகத்தின் ஒரு பிரதியை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதைச் சொல்வோம். கிறிஸ்தவர்களாகிய நமக்கு, நமது தேசத்திற்கான தேவனுடைய உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவரோடு ஒத்துழைக்க வேண்டிய பாக்கியமும் பொறுப்பும் இருப்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஜெபம் அமெரிக்க வரலாற்றை மீண்டும் மீண்டும் தீர்மானமாக எவ்வாறு பாதித்தது என்பதை மூல வரலாற்று ஆவணங்களிலிருந்து இது காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வரும் அறிவிப்பு, இந்தப் புத்தகத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதைச் சொல்லும்.

லைக்
பகிரவும்