மன வேதனையிலிருந்து விடுதலை

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
இன்றைய வேகமான உலகில், மன வேதனை ஒரு பொதுவான போராட்டமாகும். 'தேவனுடைய வாக்குத்தத்தங்களின் தேசத்தில் நடத்தல்' தொடரின் ஒரு பகுதியான 'மன வேதனையிலிருந்து விடுதலை' என்ற செய்தியில் டெரெக் பிரின்ஸுடன் இணையுங்கள். நற்செய்தி வழங்கும் உண்மையான விடுதலை மற்றும் சமாதானத்தை அவர் இதில் விளக்குகிறார். தேவனுடைய வார்த்தை உங்களை இந்தத் தளைகளிலிருந்து விடுவித்து, ராஜ்யத்தின் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்க எவ்வாறு வழிநடத்தும் என்பதைக் கண்டறியுங்கள்.
Transcript
உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது, தேவனின் வாக்குத்தத்தங்கள் நிறைந்த தேசத்தின் ஊடாக நடத்தப்பட்ட சுற்றுப்பயணத்தில் நாம் ஒன்றாக ஒரு படி மேலே செல்லுகிறோம்.
“தேவனுடைய பிள்ளையாக மாறுவது எப்படி” என்ற கேள்விக்கு நேற்று நான் வேதத்தின் பதிலைக் கொடுத்தேன். இன்று நமது வயதின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான மன வேதனையின் பிரச்சனையைக் கையாளப் போகிறேன். இந்த வகையான வேதனையிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
நமது சமகால கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தில் நாம் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு ஆளாகிறோம் என்பதையும், அவை எப்போதும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருப்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை அனைத்தும் நாம் பெயரிட முயற்சிக்கும் அளவுக்கு மிக அதிகமாக இருக்கும், ஆனால் நான் உங்களுக்கு சில எளிய எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.
அழுத்தத்தின் ஒரு பொதுவான வடிவம், நமது சொந்த குறிப்பிட்ட பிரிவில் இருந்தும், நமது வயது நிலை, நமது சொந்த சமூக நிலை போன்றவற்றில் இருந்தும் வருகின்ற சக அழுத்தம் ஆகும் – பிரிவில் இருக்கும் மற்றவர்களைப் போல நாமும் இணங்க வேண்டிய அழுத்தமாகும். குழந்தைகள் ஒன்றாக பள்ளியில் இருக்கும்போது இது மிகவும் தெளிவான முறையில் வெளிப்படுகிறது. மற்ற எல்லாக் குழந்தைகளும் செய்வதையே செய்ய வேண்டிய அழுத்தம் இருக்கிறது. உதாரணமாக, மற்ற எல்லா குழந்தைகளும் அதைச் செய்வதால், ஒரு குழந்தை மரிஜுவானாவை புகைப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்படலாம். அல்லது எல்லாரும் அதைச் செய்கிறார்கள் என்பதற்காக திட்டும் வார்த்தைகள் அல்லது அசுத்தமான வார்த்தைகளை உபயோகிப்பதாக இருக்கலாம், அதைச் செய்யாமல் இருப்பது, புண்பட்ட கட்டைவிரலைப் போல உங்களை தனித்து நிற்கச் செய்கிறது. அல்லது வாழ்க்கையில் நாம் வளரும்போது அழுத்தம் தொடர்கிறது – “அண்டை வீட்டாரைப் பின்பற்றுவது” என்று அழைக்கப்படுகிறது. தெருவில் உள்ள மற்ற குடும்பத்தினர் புதிய கார் வைத்திருந்தால், நாமும் புதிய கார் வைத்திருக்க வேண்டும்; அவர்கள் ஒரு நீச்சல் குளம் கட்டினால், நாமும் ஒரு நீச்சல் குளம் கட்ட வேண்டும் என்று இருப்பது. மற்றவர்களைப் போல இருப்பதும், மற்றவர்களை பின்தொடர்வதும் கிட்டத்தட்ட இடைவிடாத அழுத்தமாக இருக்கிறது, பெரும்பாலும், இது நமது சொந்த உள்ளான இயல்புக்கும், உண்மையான ஆளுமைக்கும் எதிரானது.
மீண்டும், மற்றொரு வெளிப்படையான அழுத்தம் பொருளாதார அழுத்தமாகும், உங்கள் பொருள்சார்ந்த ஆசைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம், உங்கள் முதுமைக்கு சில பாதுகாப்பை வழங்குவதற்கும், மக்கள் செய்யும் விஷயங்களைச் செய்வதற்கும், அந்த வரிசையில் பெரும்பாலான விஷயங்களைச் செய்வதற்கும் முக்கியமானது பணமாகும். எனவே, பணத்தைப் பெறுவதற்கு தொடர்ச்சியான அழுத்தம் இருக்கிறது. பொதுவாக, மக்கள் எவ்வளவு பணம் பெற்றாலும், அது போதுமானதாக இருக்காது.
பின்னர், இன்னும் சில அடிப்படை அழுத்தங்கள் உள்ளன. உயிர்வாழ்வதற்கான அழுத்தம், உதாரணமாக, நோய்க்கு எதிரான போராட்டத்தில். பலருக்கும் நோய்க்கான நிலை கண்டறியப்படுகிறது, அது குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் ஆபத்தானதாக இருக்கிறது. எனவே, ஒரு நோயை எதிர்த்துப் போராடுபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம், அதில் ஒரு சில மாதங்களில், ஒருவேளை சில வருடங்களில், அது உங்கள் உயிரைப் பறிக்கப் போகிறது என்னும் முன்கணிப்பு இருக்கலாம். எனவே, இந்த வகையான மரண தண்டனை உங்கள் மீது காணப்படலாம், இது ஒரு வகையான அழுத்தம்.
இப்போது, அடிக்கடி இதுபோன்ற அழுத்தங்களுடன் தொடர்புடைய ஒரு குரல் உங்கள் மனதில் பேசிக்கொண்டிருக்கலாம். சில சமயங்களில் இது கேட்கக்கூடிய குரலாக இருந்தாலும், பல சமயங்களில் அது உள்ளான குரலாகவே இருக்கிறது, இருப்பினும், அது சொல்லும் விஷயங்களை தெளிவான மற்றும் குறிப்பிட்ட வாக்கியங்களில் வடிவமைக்க முடியும். ஒரு குரல் இருக்கும் இடத்தில், குரலுக்குப் பின்னால் ஒரு நபர் இருக்கிறார் என்பதை இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் ஒரு நபர் இல்லாத குரல் என்று எதுவும் இல்லை. ஒரு குரல் இருப்பது ஒரு நபரின் இருப்பைக் குறிக்கிறது.
பல சமயங்களில் இது போன்ற சூழ்நிலைகளில் நாம் கேட்கும் குரல் நம்மை குற்றம் சாட்டுகிறது அல்லது ஏதோ ஒரு வகையில் நம்மை வேதனைப்படுத்துகிறது. நம் மனதில் தோன்றும் குரல் குற்றம் சாட்டுகிறது அல்லது வேதனைப்படுத்துகிறது என்றால், நமக்கு நிச்சயமாக தெரிய வேண்டிய ஒரு காரியம்: அந்தக் குரலுக்கு பின்னால் ஒரு நபர் இருக்கிறார், அந்த நபர் சாத்தான். பிசாசாகிய சாத்தான் ஒரு குற்றம் சாட்டுபவன், வேதனைப்படுத்துபவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மனதில், உங்கள் வாழ்க்கையில், உங்களை குற்றம் சாட்டும் அந்த குரல், உங்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டு, உங்களை வழிநடத்திக்கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் பிசாசு வேலை செய்கிறான் என்பதை எந்த ஆதாரமுமின்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
மக்கள் மனதில் பிசாசு கொண்டுவரும் பொதுவான குற்றச்சாட்டுகள் மற்றும் வேதனைகளின் உதாரணங்களை நான் தருகிறேன். நான் உங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உதாரணங்களும், நான் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கும், மன வேதனையை அனுபவிப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதில் சந்தித்திருக்கிறேன்.
ஒரு பொதுவான குற்றச்சாட்டு என்னவென்றால்: தேவன் உன்னை நேசிக்கவில்லை. நீ நிராகரிக்கப்பட்டு தனிமையாக உணர்கிறாய் என்பதே. மற்ற மனிதர்கள் தேவனுடன் தொடர்பு கொள்ள முடியும், தேவனுக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு திட்டம் இருப்பதாக தெரிகிறது ஆனால் நீதான் விதிவிலக்கு.
அல்லது, “நீ எப்போதும் தோற்றுபோவாய்.” ஒருவேளை அந்தக் குரல் உங்களுக்கு நேரடியாக உங்கள் மனதிற்கு வருவது மட்டுமல்லாமல், அது மற்றொரு நபர் மூலமாகவும் உங்களுக்கு வரும். ஒருவேளை உங்கள் பெற்றோர் மூலமாகவோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை மூலமாகவோ இருக்கலாம். “நீ எப்போதும் தோற்றுபோவாய்.” “நீ பலமுறை தோற்றுவிட்டாய், வாழ்க்கையில் உனக்கு தோல்வியைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.” நீ எப்போதும் தோற்றுபோவாய் என்று இந்தக் குரல்தான் சொல்கிறது.
அல்லது “நீ சரியான மனநிலையில் இல்லை.” ஆலோசனைக் கூட்டங்களில், “நீ சரியான மனநிலையில் இல்லை” என்ற சத்தம் பல பேருக்கு இருப்பதைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். இது பொதுவாக, இதுபோன்ற ஒன்றைச் சொல்கிறது, “உன் அத்தை ஒரு மனநல காப்பகத்தில் இறந்துவிட்டார் என்று உனக்குத் தெரியும், உன் பாட்டியுடன் ஏதோ விசித்திரமான விஷயம் இருந்தது, நீ அடுத்ததாக இருக்கப் போகிறாய்.” அந்த வகையான வேதனை எவ்வளவு கொடுமையானது என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்.
பின்னர், நோயின் அறிகுறிகளுடன் தொடர்புடைய உடலின் வலி, வேதனை இருக்கிறது. “அது புற்றுநோயால் ஏற்படுகிறது வலி” போன்ற வேதனையாக இருக்கலாம். உங்கள் அடிவயிற்றில் எங்காவது வலி ஏற்படலாம், ஒருவேளை உங்களுக்கு வேறு அறிகுறிகள் இருக்கலாம், சில வகையான இரத்தப்போக்கு, மேலும், நீங்கள் மருத்துவரிடம் சென்று எக்ஸ்ரே அல்லது பரிசோதனை செய்து கொள்ள மிகவும் பயப்படலாம், ஆனால் இரவும் பகலும் இடைவிடாமல் உங்கள் மனதில் இந்த எண்ணம் உருவாகிறது, “அது புற்றுநோய் தான். புற்றுநோய்தான் அந்த வலியை ஏற்படுத்துகிறது.” ஒருவேளை, உங்களிடம் மிகக்குறைவான பிரச்சனை ஏதேனும் இருக்கலாம், ஆனால், நீங்கள் வேதனைப்படுகிறீர்கள், உங்களைத் துன்புறுத்துபவனின் சவாலை எதிர்கொள்ள மிகவும் பயப்படுகிறீர்கள்.
இப்போது, வேதத்தில் அந்த மாதிரியான வேதனையை அனுபவித்த ஒரு மனிதரைப் பற்றிய விவரம் உள்ளது, அதை அவர் மிகத் தெளிவாக ஒரு சில வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறினார், அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த மனிதர் யோபு ஆவார், இந்த வார்த்தைகள் யோபு 3:25-26 இல் காணப்படுகின்றன. யோபு சொல்வதைக் கவனியுங்கள்:
25 நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. 26 எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
நமது சமகால நாகரிகத்தில் எண்ணற்ற ஆயிரக்கணக்கானோருக்கு இது உண்மையானது. “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது.” பாருங்கள், உங்கள் பயம், நீங்கள் பயப்படும் விஷயத்திற்கான கதவைத் திறக்கும். ஒருவேளை, சிலருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று புற்றுநோயைப் பற்றிய பயம்தான். நிச்சயமாக, மக்கள் தங்கள் மனதை செயலிழக்கும் காரணங்களில் ஒன்று தங்களின் மனம் செயலிழந்துவிடுமோ என்ற பயமாகும். எனவே, பிசாசானவன் உங்கள் பயத்தை நெம்புகோலாக பயன்படுத்தி, அந்த பயத்தைத் தொடர்ந்து வேறு ஏதாவது உங்கள் மீது வரும்படி செய்கிறான். “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.” அதுதான் உங்கள் நிலையா? அது உங்களைப் பற்றி விவரிக்கிறதா? ஒரு பரிகாரம் இருக்கிறதை நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.
முதலில், நம் வாழ்வில் சாத்தான் நுழைவதற்கு பயன்படுத்தும் கதவை நாம் அடையாளம் காண வேண்டும். பல்வேறு கதவுகள் இருக்கின்றன, ஆனால் ஆலோசனைக் கூட்டங்களில் நாம் பலமுறை பார்த்த பொதுவான இரண்டு கதவுகளை உங்களுக்கு பரிந்துரைக்க போகிறேன். சாத்தான் பயன்படுத்தும் முதல் கதவு, நமக்குள் இருக்கும் வெறுப்பு மற்றும் மன்னிக்காத தன்மையாகும். நாம் மற்றொரு நபரை, பொதுவாக நமக்கு மிகவும் நெருக்கமான நபரை வெறுப்பாகவும், மன்னிக்காமலும் இருக்கிறோம். அது பெற்றோராக இருக்கலாம், அது கணவராகவோ அல்லது மனைவியாகவோ அல்லது குழந்தையாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரராகவோ அல்லது தேவாலயத்தில் ஒரு ஊழியராகவோ இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவராகவோ இருக்கலாம். சாத்தான் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு கதவு கலகம், தேவனுக்கு எதிரான கலக மனப்பான்மை. சில நேரங்களில் சமூகத்திற்கு, மனித அதிகாரத்துக்கு எதிராகவும் இருக்கலாம். ஆனால், அதன் சாராம்சத்தில், அது தேவனுக்கு எதிரான கலகம், தேவனுடைய நீதியுள்ள அரசாங்கத்துக்கு அடிபணிய மறுப்பதாகும்.
இப்போது, முதலாவது தீர்வு என்னவென்றால், கதவை மூடுவதாகும். மனக்கசப்பும், மன்னிக்காததும் கதவு என்றால், நாம் வெறுத்த நபரை மன்னிக்க வேண்டும். அந்த கோபத்தை, அந்த கசப்பை, அந்த வெறுப்பை நாம் கீழே போட வேண்டும். கர்த்தருடைய ஜெபத்தில் இயேசு சொல்வதைக் கவனியுங்கள் (மத்தேயு 6):
12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
நாம் மற்றவர்களை மன்னிக்கும் அளவிற்கு அதிகமாக நம்மை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்க நமக்கு உரிமை இல்லை. அதுதான் தேவன் நம்மை மன்னிக்கும் அளவுகோலாகும். இயேசு அதைப் பற்றி கூறுகிறார்:
14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
எனவே, நாம் தேவனிடமிருந்து மன்னிப்பை விரும்பினால், நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். தேவன் அந்தக் கோரிக்கையை வகுத்திருக்கிறார், அவர் அதை மாற்ற மாட்டார். நினைவில் கொள்ளுங்கள், மன்னிப்பு ஒரு உணர்ச்சி அல்ல, அது ஒரு தீர்மானம். ஒரு வகையில், இது யாரோ உங்களுக்கு கடன்பட்டவர்களின், கடன் உறுதிச்சீட்டை கிழிப்பது போன்றதாகும். நீங்கள் உங்கள் கைகளில் கடன் உறுதிச்சீட்டை வைத்திருக்கலாம், ஆனால் தேவன் உங்களுடைய ஏராளமான கடன் உறுதிச்சீட்டுகளை அவர் கையில் வைத்துள்ளார். தேவன் சொல்கிறார், “நீ உன்னுடைய கையில் உள்ள கடன் உறுதிச்சீட்டை கிழித்துவிடு, என்னுடைய கையில் உள்ளதை நான் கிழித்துவிடுவேன்.” மற்றவர்களை மன்னிப்பதுதான் முதலில் கதவை மூடுவதாகும்.
ஆனால், உங்கள் பிரச்சனை கலகம் என்றால், குறிப்பாக தேவனுக்கு எதிரான கலகம் என்றால், கதவை மூடுவதற்கான வழி தேவனுக்கு அடிபணிவதாகும். மீண்டும், இது உங்கள் விருப்பத்தின் தீர்மானமாகும். யாக்கோபு 4 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனத்தில் சொல்வதை கவனியுங்கள்:
7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
பாருங்கள், நீங்கள் தேவனை எதிர்த்து நிற்கும்வரை நீங்கள் பிசாசை எதிர்க்க முடியாது, ஏனென்றால், பிசாசை எதிர்க்கத் தேவையான விசுவாசத்தையும், வலிமையையும், கிருபையையும் தேவன் மட்டுமே உங்களுக்கு கொடுக்க முடியும். எனவே, பிசாசு உங்களை துன்புறுத்தினால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தேவனுக்கு அடிபணிய வேண்டும். தேவனுக்கு எதிரான உங்கள் கலகத்தை விட்டுவிடுங்கள். “தேவனே, நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீர் என்னை படைத்தவர். நீர் பிரபஞ்சத்தை ஆளுகிறீர். உம்முடைய நீதியுள்ள அரசாங்கத்திற்கும், என் வாழ்க்கையில் உம்முடைய பரிவர்த்தனைகளுக்கும் நான் ஒப்புக்கொடுக்கிறேன். நீர் என்னில் எதிர்பார்க்கிற எதையும் நான் செய்கிறேன்.” என்று சொல்லுங்கள். பின்னர், பிசாசு தம்மிடம் வந்தபோது, இயேசு செய்தது போல், தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்து, பிசாசை உங்கள் வாழ்க்கையிலிருந்து விரட்ட உங்களுக்கு உரிமை உண்டு. அவர் ஒவ்வொருமுறையும் அவனுக்கு பதிலளித்தது, "எழுதியிருக்கிறதே….. எழுதியிருக்கிறதே….. எழுதியிருக்கிறதே……“இயேசு தேவனுக்கு அர்ப்பணித்தார், எனவே, அவர் பிசாசை எதிர்க்க முடிந்தது. இயேசு தேவனுக்கு அர்ப்பணித்தது போல நீங்களும் தேவனுக்கு அர்ப்பணித்தால், பிசாசை எதிர்க்க உங்களுக்கு உரிமை உண்டு. அந்த சத்தங்களுக்கு, “நான் இனி உன் பேச்சை கேட்கமாட்டேன். சாத்தானே, என் வாழ்க்கையை விட்டு வெளியேறு! நான் தேவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன், நான் தேவனுக்கு சொந்தமானவன், என் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை! இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் எனக்கு எதிரான அனைத்து உரிமைகளும் தீர்க்கப்பட்டன. நான் இப்போது உன்னை எதிர்த்து, என்னை விட்டுப் போகும்படி கட்டளையிடுகிறேன்.” என்று சொல்லலாம்.
சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். இன்றைய நமது தலைப்பில் இருந்து மிக இயல்பாகப் பின்தொடரும் மற்றொரு தலைப்பில் நாளை நான் பேசுவேன். உண்மையான மன நிம்மதியை எப்படி அனுபவிப்பது என்பதுதான் அந்த தலைப்பாகும்.
குறியீடு: RP-R024-104-TAM









