உங்களுடன் மீண்டும் இருப்பது நல்லது, நாம் மற்றொரு வாரத்தின் முடிவுக்கு அருகில் இருக்கிறோம். இந்த வாரம் முழுவதும் நான் விசுவாசத்தின் வளமான உற்சாகமான கருப்பொருளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனது கடைசி மூன்று பேச்சுகளில், விசுவாசத்தின் மூன்று பெரிய அவசியமாக செய்ய வேண்டியவைகளைப் பற்றிக் கையாண்டேன்: விசுவாசம் அறிக்கைசெய்யப்பட வேண்டும், விசுவாசம் செயல்பட வேண்டும், விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். இன்று எனது இறுதி பேச்சில், நான் மீண்டும் ஒருமுறை விசுவாசத்துக்கு நேர்மாறாக இருக்கிறதான அவிசுவாசத்துக்கு மறுபடியும் செல்லப் போகிறேன். மனிதனின் வீழ்ச்சிக்கு அவிசுவாசம் எப்படி காரணமாக இருந்தது என்பதை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்.

படைப்பில் ஆதாமும், ஏவாளும் வைக்கப்பட்ட சூழ்நிலையை நாம் பார்க்க வேண்டும். தேவன் அவர்களுக்காக ஒரு அழகான இடத்தையும், மகிழ்ச்சியான ஏற்பாடுகளையும், மிகுந்த மகிழ்ச்சியையும் உண்டாக்கினார். அந்த இடம் ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. அவ்வப்போது, தேவன் தோட்டத்துக்கு வந்து, ஆதாம் மற்றும் ஏவாளுடனும், அவரது உயிரினங்களுடனும் ஐக்கியம் கொண்டார். ஆனால் தேவன் ஒரு நபராக தோட்டத்தில் நிரந்தரமாக இருக்கவில்லை. அவர் நேரில் இல்லாதபோதும், ஆதாம் மற்றும் ஏவாளிடம் அவர் விட்டுச்சென்ற வார்த்தையால், அவர் இன்னும் வெளிப்படுத்தினார். ஆதியிலே, ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கையில் தேவனுடைய நிரந்தர பிரதிநிதியாக இருப்பது அவருடைய வார்த்தைதான் என்பதை நாம் அறிந்துகொள்வது முக்கியமானது. அது அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியது, அவருடைய மனதை அவர்களுக்குத் தெரிவித்தது, அது அவருடைய அதிகாரத்தை அவர்களுக்கு பிரதிநிதித்துவம் செய்தது. மேலும், வார்த்தையின் மீதான அவர்களின் மனப்பான்மை தேவனிடம் அவர்களின் மனப்பான்மையைப் போலவே இருந்தது என்பதை நாம் சரியான நேரத்தில் பார்ப்போம்.

தேவன் அவர்களிடம் விட்டுச்சென்ற வார்த்தையைப் பார்ப்போம். அது எளிமையானது. நீண்ட செய்தி அல்ல. இது ஆதியாகமம் 2:16-17இல் கூறப்பட்டுள்ளது:

16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

தேவன் ஆதாமிடம் விட்டுச் சென்ற இந்த வார்த்தையில் மூன்று பகுதிகள் அல்லது பிரிவுகள் இருந்தன: முதலாவது அனுமதி ஆகும்; “தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.” இரண்டாவது தடை ஆகும்; “ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்.” மூன்றாவது பகுதி ஒரு எச்சரிக்கையாகும்; “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” எனவே, இது மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு வார்த்தையாகும்: அனுமதி, தடை, மற்றும் எச்சரிக்கை.

இப்போது, ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தையை நம்பி, கீழ்ப்படிந்த வரையில், அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தனர், அவர்களுக்கு எந்தத் தீமையும் வரவில்லை, எந்த வகையான தீங்கும் இல்லை. ஒவ்வொரு தேவையும் முழுமையாகவும் ஏராளமாகவும் பூர்த்தி செய்யப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, அவர்களது ஆத்துமாவின் விரோதியான சாத்தான், கடைசியில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தும் விதத்தில் தனது அணுகுமுறையைத் திட்டமிட வேண்டியிருந்தது, மேலும், அவன் அதை மிகவும் நுட்பமான வழியில் செய்தான். எல்லா உயிரினங்களிலும் அவன் நுட்பமானவன் அல்லது தந்திரமானவன் என்று வேதம் கூறுகிறது.

சாத்தானின் அணுகுமுறையைப் பற்றிய மூன்று குறிப்புகளை நாம் கவனிக்கலாம். அவனுடைய தந்திரத்தை. முதலாவதாக, அவன் ஆதாமிடம் செல்லவில்லை, ஆனால் அவன் ஏவாளிடம் சென்றான். வேதம் பெண்களை “பெலவீனமான பாண்டம்” என்று அழைக்கிறது. இரண்டாவதாக, அவன் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தையும், நம்பகத்தன்மையையும் குறைந்த மதிப்பிற்கு உட்படுத்த முயன்றான். மூன்றாவதாக, இதைச் செய்ய அவன் வெறுமனே கேள்வி கேட்பதன் மூலம் தொடங்கினான், தேவனுடைய வார்த்தையை உடனடியாக மறுக்கவில்லை.

இப்போது நான் ஆதியாகமம் 3:1-6இல் உள்ள பகுதியைப் படிக்கப் போகிறேன், நான் படிக்கும்போது இந்தக் குறிப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. [நீங்கள் கேள்வியைக் கவனித்தீர்களா, பதில் தெரியாததால் அவன் கேட்கிறான் என்று நான் நம்பவில்லை.] 2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

இப்போது, நீங்கள் பின்வரும் கருத்தை கவனிக்க வேண்டும். சாத்தானின் கேள்வியை ஏவாள் கவனித்தவுடன், மறுப்பை நிராகரிக்கும் நிலையில் அவள் இல்லை. உங்களுக்கும் எனக்கும் இதுவே உண்மையானது என்று நான் நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையைப் பற்றிய சாத்தானின் கேள்விகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தை தேவனைக் குறிக்கிறது, மேலும் நாம் தேவனைப் பற்றிய கேள்வியை ஏற்றுக்கொள்வதை விட தேவனுடைய வார்த்தையைப் பற்றிய கேள்வியை ஏற்றுக்கொளக்கூடாது. ஏவாள் கேள்வியை ஏற்றுக்கொண்டவுடன், அதைத் தொடர்ந்து சாத்தான் நேரடியாக மறுத்துவந்தான். தேவன் சொன்னார், “நீ சாகவே சாவாய்;” சாத்தான் சொன்னான், “நீங்கள் சாகவே சாவதில்லை.”

மூன்றாவதாக, ஆதாமும் ஏவாளும் தேவனுடனான அவர்களின் தனிப்பட்ட உறவிலிருந்து அவன் எவ்வாறு அந்நியப்படுத்தினான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், அவன் அதை மிகவும் தந்திரமான முறையில் செய்தான். இந்த அழகான தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் சிறையில் அடைத்த தேவன் ஒரு வகையான தன்னிச்சையான சர்வாதிகாரி என்றும், அவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அனுமதிக்கவில்லை அல்லது தனிநபர்களாக தங்கள் சொந்த திறனை முழுமையாக வளர்த்துக் கொள்ள அனுமதிக்கவில்லை என்றும் அவன் சொல்லாமல் சுட்டிக்காட்டினான். அவன் அதை இவ்வாறு செய்தான், அவன் கூறினான்,” நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” இதன் உட்பொருள் என்னவென்றால், “நீங்கள் அவருக்கு சமமாக இருப்பதை தேவன் விரும்பவில்லை. நன்மை தீமைகளை அறிய அவர் உங்களை நம்பவில்லை, அவர் உங்களை தாழ்வான நிலையில் வைத்திருக்க விரும்புகிறார். ஆனால் உங்களைப் போல மிகவும் புத்திசாலிகளும், மிகவும் சிறந்தவர்களுமான மக்கள், இந்த சர்வாதிகாரி உங்களை வைத்திருக்க முற்படும் இந்த தாழ்வு மனப்பான்மையை உண்மையில் தாங்கக்கூடாது. மேலும், அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் சொல்வதை மட்டும் கவனி.” ஆகவே, உண்மையில் சாத்தான் தேவனுடைய நற்குணத்திற்கு எதிராக நிற்கத் தூண்டிவிட்டான் என்பதை நீங்கள் காணலாம். தேவன் நியாயமற்றவர், தன்னிச்சையானவர், உண்மையில் அவர் நம்பகமில்லாத ஒரு சர்வாதிகாரி என்று அவன் பரிந்துரைத்தான்.

இந்த தொடர் பேச்சுகளின் தொடக்கத்திலே நான் முக்கியமாக தேவனிலும், அவருடைய நன்மையிலும் நம்பகத்தன்மை இருக்கிறதை நான் சுட்டிக்காட்டினேன், தேவன் மீதும், அவருடைய நன்மையின் மீதும் நாம் விசுவாசத்தை இழந்துவிட்டால், விரைவாகவோ அல்லது பின்னரோ, நாம் அவருடைய வார்த்தையில் விசுவாசத்தை இழந்துவிடுவோம். எனவே, பிசாசு அதைத்தான் செய்தான்.

இப்போது, மீண்டும் நான் ஆதியாகமம் 3:6க்கு செல்ல விரும்புகிறேன். அந்த வசனத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான விஷயத்தை நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

நாம் மேலும் படிக்க வேண்டியதில்லை. அங்குள்ள முக்கியமான சொல் “கண்டு” என்பதாகும், “ஸ்திரீயானவள்….கண்டு.” இந்தத் தொடரில் முன்னதாகவே, 2 கொரிந்தியர் 5:6இல், பவுலின் கூற்றை மேற்கோள் காட்டினேன்:

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

விசுவாசமும், பார்வையும் எதிரெதிரானவை. அந்த தருணம் வரை, ஆதாமும் ஏவாளும் விசுவாசத்தில் நடந்தார்கள். அவர்களால் பார்க்க முடியாத, புலன்களால் உணரமுடியாத தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்தார்கள். ஆனால், கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய வார்த்தையில் அவர்கள் வைத்திருந்த விசுவாசம் சாத்தானிடமிருந்து அவர்களை பாதுகாத்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட முடிவெடுக்கும் தருணத்தில், ஏவாள் ஒரு நிலையிலிருந்து கீழ் மட்டத்திற்கு இறங்கி வந்தாள். அவள் தேவனுடைய கண்ணுக்குத் தெரியாத வார்த்தையின் விசுவாச மட்டத்திலிருந்து கீழே வந்தாள்; அவள் கீழ் நிலையான உணர்வு நிலைக்குள் வந்தாள், அவளுடைய புலன்கள் காட்டியதை அவள் நம்பினாள்.

“ஸ்திரீயானவள்….கண்டு.” அங்கே “கண்டு” என்ற வார்த்தை மிகவும் விமர்சனமானது. விசுவாசத்தில் வாழ்வதிலிருந்து, பார்வையில் வாழ்வதற்கு மாறியதை இது குறிக்கிறது. அவளது புலன்களுக்கு அவள் இடம்கொடுத்தவுடன், மரம் குறிப்பிட்ட ஈர்ப்புகளைக் கொண்டிருந்தது. விசுவாச தளத்திலிருந்து இறங்கியவுடன், அது ஏவாளுக்கு மூன்று விஷயங்களைக் கவர்ந்தது: அது புசிப்புக்கு நன்றாக இருந்தது, அது கண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஒருவனின் புத்தியைத் தெளிவிக்கிறதற்கு விரும்பத்தக்கதாக இருந்தது. இப்போது, இவை மனித அனுபவத்தின் மூலம் மீண்டும் நிகழும் சோதனையின் மூன்று அடிப்படை வடிவங்கள் ஆகும். அவை 1 யோவான் 2:15-16 இல் குறிப்பிடப்பட்டுள்ளன, அங்கு யோவான் இவ்வாறு கூறுகிறார்:

15 உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

இந்த உலகத்தின் மூன்று ஆதிக்க தாக்கங்களைக் கவனியுங்கள்: மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை. அவைதான் ஏவாளை கவர்ந்த அந்த மரத்தின் மூன்று காரியங்கள் ஆகும். அது புசிப்புக்கு நன்றாக இருந்தது, அதுதான் மாம்சத்தின் இச்சை; அது கண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அதுதான் கண்களின் இச்சை; ஒருவனின் புத்தியைத் தெளிவிக்கிறதற்கு விரும்பத்தக்கதாக இருந்தது, அதுதான் ஜீவனத்தின் பெருமை.

நீங்கள் காணலாம், ஆதாம் மற்றும் ஏவாளுக்கு சாத்தான் செலுத்திய இறுதி உந்துதல் தேவனிடத்தில் சாராமல் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்ற ஆசையாகும், அதுதான் பாவத்தின் அடிப்படை உந்துதல் ஆகும். தேவனை சாராமல் சுயாதீனத்தை அடைவதற்கான ஆசை எங்கெல்லாம் பரவிச் செயல்படுகிறதோ, அங்குள்ள விளைவு பாவம் மற்றும் தேவனுக்கு எதிரான கலகமாகும். இது மிகவும் தந்திரமாக இருக்கலாம். வெளிப்புறமாக, “நீங்கள் தேவனைப் போல் இருப்பீர்கள்,” என்ற அந்த சோதனையில் எந்தத் தவறும் இருக்காது. தேவனைப் போல இருப்பதை விட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், சாராம்சத்தில், இனி தேவனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற விருப்பத்தை அது ஈர்க்கிறது, ஆனால் சுதந்திரமாக இருப்பதும், வரம்பு மீறி அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதும், தங்கள் சொந்த வாழ்க்கையை தாங்களே கையாள்வதும் போன்றவையாகும், இவைகளே பாவத்தின் சாராம்சம்.

இப்போது, விசுவாசம் என்பது மாற்று மருந்தாகும், ஏனென்றால், விசுவாசம் நம்மை மீண்டும் தேவனைச் சார்ந்து, உண்மையான விசுவாசத்துக்குக் கொண்டுவருகிறது. விசுவாசம் தேவனுடைய நற்குணத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் விசுவாசம் நம் புலன்களுக்கு மேலாக தேவனுடைய வார்த்தையில் நம்பகத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வீழ்ச்சியைக் கொண்டு வந்த மூன்று விஷயங்கள் விசுவாசத்தால் சரிசெய்யப்படுகின்றன. விசுவாசம் நம்மை மீண்டும் தேவனைச் சார்ந்திருக்கும் நிலைக்குக் கொண்டுவருகிறது, விசுவாசம் தேவனுடைய நற்குணத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் விசுவாசம் நமது புலன்களுக்கு மேல் தேவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதனால்தான் விசுவாசம் என்பது வீழ்ச்சிக்கு மருந்தாகும். வீழ்ச்சியின் மூலம் இழந்ததை நாம் விசுவாசத்தில் தேவனிடம் திரும்பும்போது அது மீட்டெடுக்கப்படுகிறது. நேர்மையான வாழ்க்கைக்கு விசுவாசம் மட்டுமே அடிப்படையாகும்.

இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் அடுத்த வாரம் உங்களுடன் மீண்டும் வருவேன். அடுத்த வாரம் நான் மற்றொரு அற்புதமான தலைப்புக்குச் செல்கிறேன். சில முக்கிய அறிவிப்புகளுக்கு, குறிப்பாக, “வாழ்வளிக்கும் விசுவாசம் (ஃபைத் டு விவ் பை)” என்ற எனது புத்தகத்தை எவ்வாறு நீங்கள் பெறலாம் என்பதைப் பற்றிய அறிவிப்புக்கு இப்போது காத்திருங்கள். இந்த புத்தகம் விசுவாசம் என்றால் என்ன, அது எப்படி வருகிறது, அது உங்களுக்கு என்ன செய்யும் என்பதை விளக்குகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையின் புதிய தளங்களுக்கு இது உங்களுக்கு கதவைத் திறக்கும். இந்தப் புத்தகத்தை எவ்வாறு பெறலாம் என்று பின்வரும் அறிவிப்பு உங்களுக்குச் சொல்லும்.

லைக்
பகிரவும்