எவ்வாறு புதுப்பிக்கப்படுதல் நடக்கின்றது

டெரெக் பிரின்ஸ்
Published: 1979
Last Updated: ஆகஸ்ட் 2026
Read Time: 10
வேதவசனங்களில் முன்னறிவிக்கப்பட்ட இஸ்ரவேலின் மறுசீரமைப்பு செயல்முறையைக் கண்டறியுங்கள். 'மறுசீரமைப்பு' பகுதி 13, தேவனுடைய வார்த்தை இந்த ஒன்றுசேர்த்தலை எவ்வாறு துல்லியமாகச் சித்தரிக்கிறது என்பதையும், தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி கர்த்தருடைய மாறாத கிருபையை வெளிப்படுத்துவதையும் காட்டுகிறது. டெரெக் பிரின்ஸின் ஆழமான போதனையின் மூலம் கர்த்தருடைய திட்டம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Transcript
மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த, என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய, உங்களுடைய வாழ்க்கையிலும் அதையே செய்யக்கூடிய சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுவதைக் குறித்த செய்திகளை இந்த வாரத்தில் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றேன். இதைக் குறித்த பல தீர்க்கதரிசனச் செய்திகள் வேதாகமத்தில் இருக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை நேற்று நாம் பார்த்தோம். இந்தக் காலகட்டம் அதன் முடிவை நோக்கி நகரும்போது, தேவன் இஸ்ரவேலை ஒரு தேசமாய் புதுப்பித்து, திரும்பக் கூட்டிச் சேர்ப்பார் என்பதைத்தான் அவை முன்கூட்டியே கணித்துச் சொல்கின்றன. ஒரே காலகட்டத்தில், ஒரே இடத்திலிருந்து கொடுக்கப்பட்ட சிதறடிக்கப்படுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு துல்லியமாக, முழுமையாக நிறைவேறியதோ, அப்படியே புதுப்பிக்கப்படுதலைக் குறித்த வாக்குத்தத்தங்களும் முழுமையாக, துல்லியமாக நிறைவேறும் என்று விசுவாசிப்பதே மிகச் சரியாக இருக்கும் என்று நாம் நேற்றைய செய்தியில் முடித்தோம்.
இன்றைக்கு இன்னும் ஒரு படி முன்னே எடுத்து வைத்து, இந்தப் புதுப்பிக்கப்படுதலின் கிரியை எவ்வாறு நடக்கும் என்பதைப் பார்ப்போம். வேதாகமத் தீர்க்கதரிசனங்கள், இஸ்ரவேல் திரும்பவும் கூட்டிச் சேர்க்கப்படுவதை முன் கூட்டியே கணித்துச் சொல்வதோடு நின்று விடவில்லை. திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகிற இந்த நிகழ்வு, எவ்வாறு, எந்த வழிமுறையில் நிறைவேறும் என்பதைக் குறித்த மிகவும் தெளிவான, துல்லியமான படங்களையும் அது கொடுக்கிறது. முதலில், சகரியா 2-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 6-ம் வசனத்தை வாசிப்போம்.
6 “ஓகோ, நீங்கள் எழும்பி வட தேசத்திலிருந்து ஓடி வாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப் பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார்.”
பூமியின் எல்லா மூலைகளுக்கும், ஆகாயத்தின் நான்கு திசைகளுக்கும் இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்டிருந்த ஒரு சூழ்நிலையில்தான் இது கொடுக்கப்பட்டது. அதை நாம் கவனிக்க வேண்டும். வட தேசத்திலிருந்து தீவிரமாய் ஓடி வரும்படி, ஒரு அவசரமான எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. வேதாகமத்தின் வசனங்களைக் குறித்து ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். திசைகளைக் குறித்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தால், அது எப்பொழுதும் இஸ்ரவேல் தேசத்தோடு தொடர்புடையதாகத்தான் இருக்கிறது. “வட தேசம்” என்றால், அது இஸ்ரவேல் தேசத்திற்கு வடக்கிலுள்ள தேசங்களாகவும், “கிழக்குத் திசை” என்றால், அது இஸ்ரவேல் தேசத்திற்குக் கிழக்கிலுள்ள தேசங்களாகவும் இருக்கின்றன. இது மற்ற திசைகளுக்கும் பொருந்தும். ஆகையால் வட தேசம் என்றால், அது ஜெர்மனி, போலந்து மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களைத்தான் குறிக்க வேண்டும்.
இப்பொழுது எரேமியா 3-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 12 மற்றும் 14 வசனங்களை நாம் வாசிப்போம். வட தேசத்தைக் குறித்த இன்னொரு கணிப்பை நாம் இங்கே பார்க்கிறோம்:
12 “நீ போய் வடதிசையை நோக்கிக் கூற வேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்கிறார். நான் உங்கள் மேல் என் கோபத்தை இறங்கப் பண்ணுவதில்லை. நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார். நான் என்றைக்கும் கோபம் வைக்க மாட்டேன்.” 14 சீர்கெட்ட பிள்ளைகளே திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். நான் உங்கள் நாயகர் (மாஸ்டர்). நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக் கொண்டு வருவேன்.”
வட தேசங்களாகிய ஜெர்மனி, போலந்து, ரஷ்யா போன்ற தேசங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இங்கே திரும்பவும் கவனியுங்கள். இந்தத் தேசங்களிலிருந்து தப்பி ஓடி வரும்படி இஸ்ரவேல் சந்ததியாருக்கு தேவன் கொடுத்த மிகவும் அவசரமான ஒரு அழைப்பாய் இது இருக்கிறது. இப்பொழுதும் இதற்கு வாய்ப்பிருக்கிறது. யூதர்களின் வரலாற்றில் நிகழ்ந்த சோகமான சம்பவங்களில் ஒன்று, இந்தத் தீர்க்கதரிசனங்களெல்லாம் இந்த நேரத்தில் தங்களைக் குறித்துதான் பேசுகிறது என்பதை ஒட்டுமொத்தமாக யூதர்கள் எல்லோருமே அறியாமல் இருந்து விட்டதுதான். தேவனுடைய அவசரமான எச்சரிக்கையின்படி அவர் செயல்படாமல் இருந்து விட்டனர். யாருக்குத் தெரியும், இந்த நேரத்தில் இஸ்ரவேல் இதைப் புரிந்து கொண்டு, இந்தத் தீர்க்கதரிசனங்களின்படி செயல்பட்டிருந்தால், இன்னும் நிறைய பேருடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்க முடியும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், இஸ்ரவேல் தேசத்தில்தான் நான் வாழ்ந்தேன். “ஊரிலிருந்து ஒருவனையும், ஒரு குடும்பத்திலிருந்து இருவரையும்….” என்று எரேமியாவில் தேவன் சொன்ன வார்த்தையின் துல்லியமான நிறைவேறுதலை நான் நேரில் கண்டிருக்கிறேன். திரும்பத் திரும்ப நாங்கள் ஒன்றைப் பார்த்திருக்கிறோம். நிறைய பேர், இன்னும் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ள ஒரு குடும்பத்தில், இரண்டு பேர் மட்டுமே தப்பியோடியிருப்பார்கள். அவர்கள் வெவ்வேறு பட்டணத்திலிருந்து திரும்பி வந்து, இஸ்ரவேலில் ஒன்றாய் இணைந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகையால் வேதவசனத்தின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவைகள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இப்பொழுது நாம் எரேமியா 16-ம் அதிகாரத்திற்குச் சென்று, 14-16 வசனங்களை வாசிப்போம். இங்கே கர்த்தர் இஸ்ரவேலை எவ்வாறு திரும்பக் கூட்டிச் சேர்க்கிறார் என்பதைக் குறித்த இன்னொரு படத்தைப் பார்க்கிறோம்.
14 ஆதலால், இதோ நாட்கள் வரும். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப் பண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு இனிமேல் சத்தியம் பண்ணாமல், 15 இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்தி விட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப் பண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியம் பண்ணுவார்கள். நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுதலையாகி புறப்பட்ட பிரயாணத்தைப் பாருங்கள். அது அவர்களுடைய தேச வரலாற்றிற்கான வரலாற்றுப்பூர்வமான அடிப்படையாய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையில் அது கொண்டாடப்படுகிறது. ஆனால் அது, இந்தக் கடைசியாகத் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகிற நிகழ்வைக் காட்டிலும் குறைவான முக்கியத்துவம் அடையப் போகிறது. ஆகையால் இனி யூதர்கள் எகிப்திலிருந்து தங்களுக்குக் கிடைத்த விடுதலையைக் குறித்து பேச மாட்டார்கள். ஆனால் வட தேசத்திலிருந்தும், தேவன் அவர்களைத் துரத்தி விட்டிருந்த மற்ற தேசங்களிலிருந்தும் தங்களுக்குக் கிடைக்கிற விடுதலையைக் குறித்துதான் அவர்கள் பேசுவார்கள்.
ஜெர்மனி, போலந்து மற்றும் ரஷ்யா போன்ற வட தேசங்களுக்குக் கொடுக்கப்படும் விசேஷமான முக்கியத்துவத்தை திரும்பவும் கவனியுங்கள். அடுத்த வசனத்தில், கர்த்தர் எவ்வாறு தன் குறிக்கோளை அடையப் போகிறார் என்பதைக் குறித்து விளக்கிச் சொல்கிறார்:
16 “இதோ, நான் மீன் பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன். இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள். அதற்குப் பின்பு, வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன். இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லா குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.”
மீன் பிடிக்கிறவர்களுக்கும், வேட்டையாடுகிறவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். மீன் பிடிக்கிறவர்கள், தங்களை நோக்கி மீன்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய பொறிகளை மாட்டி, அவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் வேட்டையாடுகிறவர்கள் அவைகளின் பின்னால் இருந்து, பயத்தினால் துரத்துகிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய வருடங்களில், மீன் பிடிக்கிறவர்களும், வேட்டையாடுகிறவர்களும், இவர்கள் இரண்டு பேரும் தங்களுடைய வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். சீயோனிஸ்ட்கள்தான் (Zionists) மீன் பிடிக்கிறவர்களின் வேலையைச் செய்தனர். காலம் தாமதிப்பதற்கு முன், சுதந்திர தேசத்திற்குத் தப்பியோடும்படி, ஐரோப்பாவிலிருந்த யூதர்களிடம் சீயோனிஸ்ட் வேண்டி வருந்திக் கேட்டுக் கொண்டனர். நாசிக்கள் (Nazis) வேட்டையாடுகிறவர்களாய் பின் தொடர்ந்தனர். நாசிக்கள் (Nazis) அவர்களை ஒவ்வொரு மலையிலிருந்தும், ஒவ்வொரு குன்றிலிருந்தும், கன்மலை வெடிப்புகளிலிருந்தும் துரத்தியடித்தனர். தேவன் என்ன சொன்னாரோ, அதை அப்படியே நிறைவேற்றினார். ஒரு காரியத்தைச் செய்யும்படி தேவன் தம்முடைய கரத்தை அதில் வைத்து விட்டார் என்றால், அவர் அதை நிச்சயம் செய்து முடிப்பார். அவர் சொன்ன பிரகாரமாகவே அவர் அதைச் செய்து முடிப்பார். தேவன் இஸ்ரவேலை எவ்வாறு நடத்தினார், அவர்களைக் குறித்த அவருடைய கணிப்புகளை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை வாசிப்பதிலிருந்து நாம் திரும்பத் திரும்ப இந்தப் பாடத்தைத்தான் கற்றுக் கொள்கிறோம்.
தேவன் எவ்வாறு இஸ்ரவேலை திரும்பக் கூட்டிச் சேர்க்கப் போகிறார் என்பதைக் குறித்து அடுத்து நாம் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம் எரேமியா 18-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 1-6 வசனங்களை வாசிப்போம். ஒரு குயவன் தன் பாத்திரத்தை வனைந்து, வடிவமைத்து உருவாக்குகிற படத்தோடு இது ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது.
1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ. அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 3 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன். இதோ, அவன் திரிகையினாலே வனைந்து கொண்டிருந்தான். 4 குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப் போயிற்று. அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான். 5 அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: 6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல, நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்கிறார். இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல, நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
வேதாகமத்தில் சொல்லப்பட்டதுபோல, இஸ்ரவேல் தேசத்தில் ஒரு குயவன் தன் திரிகையில் வேலை செய்யும் விதத்தை நான் கவனித்திருக்கிறேன். இது ஆச்சரியமாயிருக்கிறது! திரிகை என்ற சக்கரம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஈரமான களிமண்ணை குயவன் தன் கையில் வைத்திருக்கிறான். அவன் அதை வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிற சக்கரத்தின் மீது வைத்து, அழுத்தி, அந்தப் பாத்திரத்தை வனைந்து, வடிவமைத்து உருவாக்குகிறான். இது எவ்வாறு இங்கு பொருந்துகிறது என்று நாம் பார்ப்போம். முதலில், இஸ்ரவேல் கெட்டுப் போனார்கள். ஆனால் அதற்காக தேவன் அவர்களை தூர எறிந்து விடவில்லை, அவர்களை நிராகரித்து விடவில்லை. அவர்களைத் திரும்பவும் உருவாக்குவேன் என்று தேவன் சொன்னார். இப்பொழுது அதைத்தான் அப்படியே தேவன் செய்து கொண்டிருக்கிறார். அவர் அவர்களை வனைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
அதை அவர் எவ்வாறு செய்கிறார் என்று கவனியுங்கள். ஒரு அழுத்தத்தை அவர் கொடுக்கிறார். அப்படித்தான் அவர் ஒரு பாத்திரத்தை வனைந்து வடிவமைத்து உருவாக்குகிறார். எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது தொடர்ச்சியாக வெவ்வேறு வகையான அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ராணுவரீதியான, பொருளாதார ரீதியான இன்னும் இதுபோன்ற பல அழுத்தங்கள் அவர்கள் மீது இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றின் மத்தியிலும், தேவன் அவர்களை தாம் விரும்புகிற ஒரு பாத்திரமாய் திரும்பவும் வனைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தச் செய்தியை முடிக்கின்ற நேரத்தில், இன்னொரு காட்சியையும் பார்த்து விட்டு இதை முடிப்போம். எசேக்கியேல் 36-ம் அதிகாரத்திற்குச் செல்வோம். 22-ம் வசனத்திலிருந்து வாசிக்க ஆரம்பிப்போம்.
22 ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் நிமித்தம் அல்ல. நீங்கள் வந்து சேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக் குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன். 23 புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக் குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம் பண்ணுவேன். அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். 24 நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுய தேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன். 25 அப்பொழுது நான் உங்கள் மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும், உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். 26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும், என் நியாயங்களைக் கைக்கொள்ளவும், அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன். 28 உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
சில முக்கியமான குறிப்புகளை நாம் இங்கே கவனிக்க வேண்டும். முதலில், புதுப்பிக்கப்படுதலில் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகின்ற நிகழ்வு, இஸ்ரவேலின் நீதியின் நிமித்தம் நடக்கவில்லை. தேவன் சொல்கிறார், “உங்கள் நிமித்தம் அல்ல. என்னுடைய பரிசுத்த நாமத்தின் நிமித்தமே, நான் இதைச் செய்கிறேன்.” இங்கு தேவனுடைய மகிமைதான் உந்துசக்தியாக, நோக்கமாக இருக்கிறது. இஸ்ரவேல் உண்மையாக இல்லாதிருந்தபோதும், தேவனுடைய உடன்படிக்கையைக் காக்கும் உண்மை இதில் பகிரங்கமாக வெளிப்படும்.
இரண்டாவதாக, இஸ்ரவேல் அதன் ஆவிக்குரிய அசுத்த நிலையின் மத்தியிலும், திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகிறது. இது பல கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள், “இஸ்ரவேல் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய மெசியாவை ஏற்றுக் கொள்ளவில்லை.” அவர்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இஸ்ரவேலின் ஆவிக்குரிய அசுத்த நிலையின் மத்தியிலும், நான் அவர்களைத் திரும்பக் கூட்டிச் சேர்ப்பேன் என்று தேவனே சொல்லியிருக்கிறார். அவர் அவர்களை அவர்களுடைய தேசத்தில் சுத்திகரிப்பார்.
இந்தப் பூமியில் ஒரே ஒரு இடத்தில் வைத்துதான் தேவன் இஸ்ரவேலை ஒரு தேசமாய் நடத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதாவது அவர் அவர்களுக்குக் கொடுத்த தேசத்தில், தேவன் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்தில்தான், அந்த ஒரு இடத்தில்தான் அவர் அவர்களை ஒரு தேசமாய் நடத்துவார், இதையெல்லாம் அவர்களுக்குச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒரு விதத்தில் இது உண்மை என்றுதான் நான் நம்புகிறேன்.
மூன்றாவதாக, திரும்பக் கூட்டிச் சேர்க்கப்பட்ட பிறகு, அவர்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் என்று தேவன் கணிக்கிறார். “நான் சுத்தமான தண்ணீரை உங்கள் மேல் தெளிப்பேன். அவர்கள் சுத்தமாவார்கள்,” என்று அவர் சொல்கிறார். சுத்தமான தண்ணீரைத் தெளிப்பது, மோசே நியமித்த பலிகள் மற்றும் சடங்குகளுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இது ஆவிக்குரிய செயல்முறைகள் மூலம் நடக்கின்ற ஆவிக்குரிய சுத்திகரிப்பைச் சுட்டிக் காட்டுகிறது. இதன் விளைவாக, ஆவிக்குரிய விதத்தில் உள்ளான மறுரூபமாகுதல் நடக்கின்றது, உள்ளான புதுப்பித்தல் நடக்கின்றது. நான் அவர்களுக்கு புதிய இருதயத்தையும், புதிய ஆவியையும் கொடுப்பேன் என்று தேவன் சொல்கிறார். புதிய இருதயமும், புதிய ஆவியும் தேவனுடைய ஆவிக்கு இணங்கி நடக்கும். அது அவர்களை தேவனுடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும் காத்து நடப்பதற்கு ஏற்ற திராணியுள்ளவர்களாய் மாற்றும். இவ்வாறு தேவன் அவர்களைப் புதுப்பித்து, அவர்களை தம்மோடு சேர்த்துக் கொள்வார். அவர்கள், தேவன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அவருடைய சொந்த ஜனங்களாய் மாறுவார்கள். தேவன் அவர்களுடைய தேவனாய் இருப்பார். திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுகிற நிகழ்வு எவ்வாறு நடக்கும் என்பதைக் குறித்த ஒரு மிகத் தெளிவான கணிப்பாய் இது இருக்கிறது. அந்தச் சம்பவங்கள் இந்த வரிசையில்தான் நடக்கும். திரும்பவும் சொல்கிறேன், என்ன செய்வேன் என்று தேவன் சொன்னாரோ, அதை அப்படியே அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது. ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை இஸ்ரவேல் திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுவதைக் குறித்த இந்தத் தலைப்பில் இன்னும் ஒரு படி முன்னே செல்வோம். திரும்பக் கூட்டிச் சேர்க்கப்படுதலுக்கான நோக்கத்தைப் பற்றி பேசப் போகிறேன்.
குறியீடு: RP-R013-103-TAM









