ஒரு புதிய வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் உங்களுடன் இருப்பது நல்லது. எனது வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்திய உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

முதலில், எனக்கு கடிதம் எழுதியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியைத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.

இந்த வாரம் புதிய ஏற்பாட்டின் மொத்த வெளிப்பாட்டில் தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கும் இரண்டு நபர்களைப் பற்றி நான் பேசப் போகிறேன். உண்மையில், இந்த இரண்டு நபர்களின் – அவர்களது தோற்றம், அவர்களது இயல்பு மற்றும் அவர்களது முடிவு, குறிந்து நாம் முழுமையாக அறியும் வரை, புதிய ஏற்பாட்டின் செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வது சரியாக இருக்கும். இருப்பினும், அவர்களின் அனைத்து தனித்துவமான முக்கியத்துவத்திற்காக, புதிய ஏற்பாட்டில் அவர்களின் பெயர் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை.

சந்தேகத்திற்கு இடமின்றி நான் குறிப்பிடுகின்ற அந்த இரண்டு நபர்கள் யார் என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எனது பதில் முதலில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம், ஆனால் நான் அவர்களைப் பற்றி சொன்னது முற்றிலும் சரியானது. அந்த இரண்டு நபர்கள் பழைய மனிதன் மற்றும் புதிய மனிதன் ஆகும். இது ஆங்கில கிங் ஜேம்ஸ் பதிப்பின் அழகிய மொழியாகும். மிக சமீபத்திய மொழிபெயர்ப்பில் அவைகள், “பழைய சுயம்” மற்றும் “புதிய சுயம்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நாம் எந்த விதத்தில் அவர்களை விவரித்தாலும், இந்த இரண்டு நபர்களைப் பற்றி புதிய ஏற்பாடு என்ன சொல்கிறது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கும் வரை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.

இன்று நமது தொடக்க வசனமாக, நாம் எபேசியர் 4:20-24க்கு திருப்புவோம்:

20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.

விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, இருந்தபோதிலும், இயேசுவில் அவர்களின் நிலையைப் பற்றி கேட்டறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்ற உண்மையை அவர்கள் நிச்சயமாக கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்ற சாத்தியத்தை அவர் அறிவிக்கிறார். இன்றும் பல உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இதுவே உண்மையானது என்று நான் நம்புகிறேன், ஆனால், நான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிற பழைய சுயம் (மனுஷன்) மற்றும் புதிய சுயத்தைப் (மனுஷன்) பற்றிய உண்மையை அவர்கள் இன்னும் கேள்விப்படவில்லை. பவுல் பின்னர் வசனம் 22இல் கூறுகிறார், இதுதான் அந்த உண்மை:

22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே, கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

எனவே, இரண்டு சுயங்கள் உள்ளன: பழைய சுயம் மற்றும் புதிய சுயம். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த இரண்டு சுயங்களைப் பற்றி குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வேதம் கூறுவதை நீங்கள் காணலாம்:

பழைய சுயத்தை களைந்து போட வேண்டும்.

புதிய சுயத்தை அணிந்துகொள்ள வேண்டும்.

வெளிப்படையாக, நாம் இதைச் செய்யப் போகிறோம் என்றால், அதில் என்ன இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பழைய சுயம் மற்றும் புதிய சுயம் ஆகிய இரண்டையும் நாம் அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால், நாம் பழைய சுயத்தை விட்டுவிடுகிறோம் என்பதையும் புதிய சுயத்தை அணிந்துகொள்கிறோம் என்பதையும் எப்படி அறிந்துகொள்வது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதைப் பற்றிய அறிவு அவசியமானது. பழைய சுயம் மற்றும் புதிய சுயம் ஆகிய இரண்டையும் நாம் அடையாளம் காண வேண்டும்.

சரி, இன்று நான் பழைய சுயத்தின் தோற்றம் மற்றும் தன்மையை விளக்கப் போகிறேன். எபேசியர் 4:22இல், பவுல் பயன்படுத்திய வார்த்தைகளில் இது சுருக்கமாக உள்ளது. அவர் சொல்கிறார், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே, கெட்டுப்போகிற பழைய மனுஷன்.”

மூன்று முக்கிய எண்ணங்கள் உள்ளன: மோசம், இச்சை, கெடுதல். கெடுதல் அல்லது ஏமாற்றுதல் என்ற இறுதி வார்த்தையுடன் துவங்குவோம். பழைய சுயத்தின் தோற்றம் ஏமாற்றுதல் ஆகும். பழைய சுயம் என்பது ஏமாற்றுதல் அல்லது வஞ்சகத்தின் விளைவாகும். இது குறிப்பாக, சாத்தானின் வஞ்சகம் ஆகும். அவன் சாத்தானின் பொய்க்கு மனிதன் செவிசாய்த்ததன் விளைவாக வந்தவன்.

பொய்யின் முழுத் தன்மையை புரிந்துகொள்ள, மனிதனின் படைப்பு மற்றும் மனித வரலாற்றின் தோற்றம் பற்றிய பதிவுக்கு நாம் திரும்பி செல்ல வேண்டும். உங்களுக்கு நினைவிருக்கிறதா, ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்ட பிறகு, தோட்டத்தில் ஒரு மரம் – நன்மை தீமை அறியத்தக்க மரம் இருப்பதாகவும், அதை அவர்கள் தொடவோ உண்ணவோ கூடாது என்று தேவன் அவர்களை எச்சரித்தார், மேலும், தேவன் அவர்களிடம், “நீங்கள் அதைத் தொட்டு புசிக்கும் நாளில், நீங்கள் நிச்சயமாக சாவீர்கள்” என்று மிகவும் பணிவுடன் கூறினார். அடுத்த அதிகாரத்தில், சர்ப்பத்தின் உருவத்தில் இருக்கும் சாத்தான், ஏவாளிடம் வந்து அவளைச் சோதிக்கிறான். சாராம்சத்தில், தேவனின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, தேவன் சொன்னதை மீறவைப்பதுதான் அந்த சோதனை, மேலும், ஏவாளை இதைச் செய்யும்படி வற்புறுத்துவதில், சாத்தான் அவனுடைய பொய்யை வெளிப்படுத்துகிறான். இந்த பொய்யானது தேவன் சொன்னதை நேரடியாக மறுப்பதாகும். தேவன் சொன்னார், “நீங்கள் சாகவே சாவீர்கள்.” சாத்தான் சொன்னான், “நீங்கள் சாகவே சாவதில்லை.” இது அதியாகமம் 3:4 இல் காணப்படுகிறது:

4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.

இப்போது, அது ஒரு நேரடியான பொய்! அந்த பொய், தேவனின் சத்தியத்தை மறுக்கிறது, இது பழைய சுயத்தை தோற்றுவிக்கிறது, பிறக்கச் செய்கிறது. பழைய சுயம் என்பது சாத்தானின் பொய்யான வஞ்சகத்தின் விளைபொருளாகும். மனித இனத்திற்கு எதிரான சாத்தானின் முதன்மையான செயல்பாடு எப்போதும் ஏமாற்று வேலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வெளிப்படுத்தல் 12:9 இல், சாத்தான், “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட…… பெரிய வலுசர்ப்பம்” என்று அழைக்கப்படுகிறான்.

நேரான பாம்பையும், நேரான சர்ப்பத்தையும் பார்த்திருக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை! பாம்பு எப்போதும் வளைந்திருக்கும்! மேலும், பாம்பினுடைய பொய்யின் விளைபொருளானது பாம்பைப் போலவே வளைந்திருக்கும். அதுதான் பழைய சுயம். அது கேடானது. அது நேர்மையற்றது! அந்த காரணத்திற்காக, எபேசியர் 4:25இன் அடுத்த வசனத்தில், பவுல் குறிப்பாக பொய்க்கு எதிராக கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறார். அவர் சொல்கிறார்:

25 அன்றியும்,…..[வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “நீங்கள் பழைய சுயத்தை விட்டுவிட்டு புதிய சுயத்தை அணிய வேண்டும் என்பதால்,”] நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

இப்போது, ஏமாற்றம் சீரழிவு செயல்முறையை இயக்குகிறது. வஞ்சகம் இச்சையை உண்டாக்குகிறது. இச்சை வக்கிரமானது, கலகத்தனமான ஆசைகளைக் கொண்டது. அந்த ஆசைகள் தேவனின் விருப்பத்திற்கு முரணானவை, அப்படி செய்ய ஆசைகொண்டவர்களின் நல்வாழ்வுக்கு எதிரானவையாகும். இச்சை பாவத்தை பிறப்பிக்கும், பாவம் மரணத்தை உருவாக்குகிறது. இது யாக்கோபு 1:13-15இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால், சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

எனவே, மொத்த செயல்முறையும் நடைபெறுகிறது: வஞ்சகம் இச்சையை உருவாக்குகிறது, இச்சை பாவத்தை உருவாக்குகிறது, மேலும், பாவம் மரணத்தை உருவாக்குகிறது.

இப்போது, நாம் பழைய சுயத்தின் தன்மையை பார்க்கப் போகிறோம், அது வஞ்சகம் மற்றும் இச்சையினால் உற்பத்தி செய்யப்படும் தன்மையாகும். அதை விவரிக்கும் ஒரு முக்கிய வார்த்தை உள்ளது. இது “கெடுப்பது” அல்லது “கேடுள்ளது” என்ற சொல்லாகும். ஆவிக்குரிய ரீதியாக, ஒழுக்க ரீதியாக மற்றும் உடல் ரீதியாக ஒவ்வொரு பகுதியிலும் பழைய இயல்பு சிதைந்து கேடுள்ளதாய் இருக்கிறது. அந்த பழைய இயல்பை, அந்த பழைய சுயத்தை விவரிக்கும் வார்த்தை “கேடு” ஆகும்.

இரண்டாவதாக, அது சாத்தானின் வித்து அல்லது சந்ததியாகும். ஆதியாகமம் 3:15இல், மனிதனின் கீழ்ப்படியாமைக்குப் பிறகு, கர்த்தர் சர்ப்பத்திடம் பேசி, சர்ப்பத்தின் வித்தைப் பற்றிப் பேசினார், அது சாத்தானின் சந்ததியாகும். பழைய சுயம் சாத்தானின் சந்ததி அல்லது வித்து என்பதால், அது சாத்தானின் இயல்பை மீண்டும் உருவாக்குகிறது.

இயேசு ஒரு இடத்தில் தம் காலத்தில் இருந்த மதத்தலைவரிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்.” எனவே, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளுக்கு பிசாசு தந்தையாவான், அவனது இயல்பை ஒரு வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம், அதுதான்: “கலகம்.” பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கலகத்திற்கும் அவன் தலைவன். எனவே, பழைய இயல்புகளின் நடத்தை நிச்சயமாக கலகத்தனமான நடத்தையாகும். ஏசாயா 53:6இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்;…

அது நடத்தையில் பழைய இயல்பின் அடையாளம் ஆகும், அது தன் சொந்த வழியில் திரும்புகிறது. அது அதன் சொந்த வழியில் செல்கிறது. அது தேவனை புறக்கணித்து, தேவனைக் குறிப்பிடாமல், தன் விருப்பத்தையும், மகிழ்ச்சியையும், திருப்தியையும் தேடுகிறது. இது எபேசியர் 2:1-3இல் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அங்கு பவுல் கூறுகிறார்:

1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். 2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். [இது கீழ்ப்படியாமையின் மகன்களான சாத்தானின் பொய் மற்றும் கலகத்தின் விளைவாகும். இது கீழ்ப்படியாமையின் மகன்களான பழைய சுயத்தைக் கொண்டவர்களின் விளக்கமாகும். அவர்களது கீழ்ப்படியாமையின் காரணமாக, சாத்தான் அவர்களுக்குள் வேலை செய்ய முடிகிறது. மேலும், பவுல் தொடர்ந்து சொல்கிறார்:] 3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

“சுபாவத்தினாலே கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்,” என்ற வார்த்தையை கவனியுங்கள். ஏன்? ஏனென்றால், சுபாவத்தினால் நாம் “கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்” மேலும், கீழ்ப்படியாமை எப்போதும் தேவனுடைய கோபத்தை கொண்டுவருகிறது. எனவே, சாத்தானின் ஏமாற்றுதலினாலும், இச்சையினாலும் உண்டான விளைபொருளான கலகத்தனமான சுபாவம் நம்மில் இருக்கிறது. இதை ஒரு எளிய வாக்கியத்தில் சுருக்கமாக சொல்லலாம்: “நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலகம் இருக்கிறது.” அந்த கலகத்தைதான் வேதம் “பழைய மனிதன்” என்று அழைக்கிறது.

எனவே, பழைய மனிதனை உருவாக்கும் செயல்முறையை நாம் சுருக்கமாகக் கூறலாம்:

சாத்தானின் வஞ்சகம் இச்சையை உண்டாக்குகிறது.

இச்சை பாவத்தை உண்டாக்குகிறது.

பாவம் மரணத்தை உண்டாக்குகிறது.

இந்த வழியில் உண்டாகும் சுபாவம் – பழைய சுயத்தின் சுபாவம் இரண்டு தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளது: முதலில், ஆவிக்குரிய ரீதியாக, ஒழுக்க ரீதியாக, உடல் ரீதியாக அது கேடானது. இரண்டாவதாக, அது கலகமானதாகும்.

சரி, இன்றைக்கு நமது நேரம் முடிந்துவிட்டது, ஆனால் நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை இதே கருப்பொருளுடன் தொடர்கிறேன். இந்த உலகளாவிய பிரச்சனையான பழைய சுயத்தின் பிரச்சனைக்கான தேவனின் தீர்வை நான் விளக்குகிறேன்.

லைக்
பகிரவும்